சில நாட்களுக்கு முன்னால் துக்ளக் பத்திரிகையின் 50ஆவது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு நடிகர் ரஜினிகாந்த் மேடையில் பேசினார். அப்போது பெரியார் தலைமையில் ராமர், சீதையின் சிலைகளை நிர்வாணமாக்கி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது என்று கூறினார். 

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழ் இனத்துக்காக பாடுபட்ட பெரியாரை பற்றி ரஜினி அவதூறாக பேசியதாக என பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது நான் தவறான விஷயங்களை எதுவும் கூறவில்லை.

1971ல் பெரியார் நடத்திய பேரணி குறித்து நான் பேசினேன். இதற்காக நான் மன்னிப்பு கேட்க முடியாது. மேலும் இது மறக்கக் கூடிய சம்பவம் அல்ல மறுக்க வேண்டிய சம்பவம் என கூறினார். 

இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தந்தை பெரியாரின் கருத்துகள் கோபுரங்களில் வைக்கப்பட வேண்டியவை, நான் உயரிய நிலையில் இருப்பதற்கு பெரியாரின் கருத்துக்கள் காரணம். அவரைப் பற்றி முழுமையாக படித்து தெரிந்து கொண்டு பேச வேண்டும் என்று கூறியுள்ளார்.

பெரியாருக்கு ஆதரவாக பேசியது பாஜகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஜினிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து, கி.வீரமணியை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் ஓ. பன்னீர்செல்வம் கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.