துக்ளக பத்திரிக்கையின் 50 வது ஆண்டு விழாவில் அந்த பத்திரிக்கையின் பெருமைகளை பற்றி நடிகர் ரஜினி மேடையில் பேசி இருந்தார். அதில் குறிப்பிட்ட முக்கியமான விஷயம் என்னவென்றால், கடந்த 1971 ஆம் ஆண்டு சேலம் மாவட்டத்தில் பெரியார் தலைமையிலான அப்போதைய ஆளும் கட்சி திமுகவின் ஆதரவோடு மூடநம்பிக்கையை ஒழிக்கும் வகையில் மாநாடு என்ற பெயரில் பேரணி ஒன்று நடைபெற்றது என்று கூறினார்.

அந்தப் பேரணியில் இந்து கடவுள்களான ராமர் மற்றும் சீதையை ஆடைகளற்ற நிலையில், செருப்பு மாலை அணிவித்தும், சிவன் மற்றும் பார்வதியை ஆடையின்றி செருப்பு மாலை அணிவித்து, இந்து மத நம்பிக்கையை இழிவுபடுத்தினார்கள். இந்த சம்பவத்தை அந்த காலகட்டத்தில் இருந்த எந்த ஒரு பத்திரிக்கையும் பிரசுரிக்கவில்லை. ஆனால் அப்போதே சோ நடத்திய ‘துக்ளக்’ பத்திரிக்கையில் அட்டைப்படமாக போட்டு தனது எதிர்ப்பை தெரிவித்தார் என்று ரஜினி பேசியிருந்தார்.

ரஜினியின் இந்த பேச்சு தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் ரஜினி பெரியாரை இழிவு படுத்தியதாகவும் அதற்காக அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று திராவிட கழகம், திமுக உள்ளிட்ட பல அரசியல் தரப்பு தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த எதிர்ப்புகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், போயஸ்கார்டனில் உள்ள அவரது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்து ரஜினி பேசினார்,  நான் உண்மையை பேசியதால் யாரிடமும் மன்னிப்பு கேட்க முடியாது. இல்லாததை ஒன்றும் நான் சொல்லவில்லை என கூறினார். 

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு, ரஜினிக்கு ஆதரவாக தனது டுவிட்டரில் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார். ரஜினி கூறுவது சரியோ தவறோ அது எனக்கு பிரச்சனை இல்லை, ஆனால் அவர் தான் கூறிய ஒரு கருத்தில் உறுதியாக உள்ளார். பயமில்லாமல் இருக்கும் அவரது நிலையை நான் பாராட்டுகிறேன் என பதிவு செய்துள்ளார்.

திமுகவின் கூட்டணி கட்சிகள் இருக்கும் காங்கிரஸ் நிர்வாகி இப்படி பேசி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிலர் தலைவர் 168 படத்தில் நடிப்பதற்காக தான் ரஜினிக்கு ஆதரவாக குஷ்பு பேசி வருவதாக கூறினர். தற்போது இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அட லூசு பசங்களா, ரஜினி சார் கூட நான் 28 வருது முன்னாடியே நடிச்சு முடிச்சுட்டேன். எனக்கு இது புதுசு இல்ல. ஏன்டா முட்டாள்ன்னு உறுதி செய்றீங்க என பதிவு செய்துள்ளார்.